திங்கள், 23 ஏப்ரல், 2012

வாசிப்பு





@

காத்திருக்க வேறிடமின்றி
நூலகத்தை நீங்கள் தேர்ந்தது
இயல்பானது -

காலத்தைக் கடந்து
வெளியை மீறி
மொழியைத் துறந்து கேட்கும்
குரலுக்காகவோ
அல்லது
காகிதமணத்தின் போதைக்காகவோ
அல்லது
அலுத்துச் சுழலும் மின்விசிறியின்
சங்கீத மீட்டலுக்காகவோ
அல்லது
நூலகத்தில் கவிந்திருக்கும்
நிர்ப்பந்த அமைதிக்காகவோ
நீங்கள் நூலகத்தைத் தேர்ந்திருக்கலாம்.

காலியிருக்கைகள் பல கிடக்க
முந்திய விநாடியில்
ஆளெழுந்துபோன
நாற்காலையைத் தேர்ந்ததும்
இயல்பானது -

காற்றோட்டமான இடமென்பதாலோ
அல்லது
முன்னவர் மிச்சமாக்கிய
மனிதச் சூட்டை உணர்வதற்காகவோ
அல்லது
பின்னல் அவிழ்ந்த ஆசனத்தை
யோசனையுடன் முடைவதற்காகவோ
அல்லது
கற்பனைக்கு உகந்த தோற்றத்தில் உட்கார்ந்து
மனதுக்குள் ரசிப்பதற்காகவோ
நீங்கள் நாற்காலியைத் தேர்ந்திருக்கலாம்.

நூலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜைமேல்
முன்பு இருந்தவர்
பாதி வாசித்துக் குப்புறக் கிடத்திய
புத்தகத்தை எடுத்ததும்
அவர் விட்டுப்போன பக்கத்தில்
வாசிப்பைத் தொடங்கியதும்
இயல்பானது.

எனது சந்தேகம்
அவர் எங்கே நிறுத்தினார் என்பதை
நீங்கள் அறிவீர்களா?
இரண்டு பக்கங்களில்
இரண்டு பக்கங்களிலுமுள்ள பத்திகளில்
இரண்டு பக்கப் பத்திகளின் வாக்கியங்களில்
எங்கே அவரது நிறுத்தம்?
அங்கிருந்து நீங்கள் தொடங்குவீர்களா?
அல்லது
நீங்களும் மேஜைமேல்
குப்புறக்கிடத்திப் போனால்
அடுத்தவர் எங்கிருந்து தொடங்குவார்?

ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது.

@
12:22 PM 5/25/2006

1 கருத்து:

  1. நல்லதொரு சிந்தனை வரிகள்...

    அருமையாக முடித்துள்ளீர்கள்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    பதிலளிநீக்கு