வெள்ளி, 10 நவம்பர், 2017

பிழை பொறுக்க மாட்டாதவர்

'தி இந்து' - இன்றைய இதழில் கலைஞர் கருணாநிதி குறித்து எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது.  ’தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்று தமிழ்த் திசை வெளியிட்டிருக்கும் மலருக்காக எழுதப்பட்டது. மலரிலும் நாளிதழிலும் எடிட் செய்யப்பட்ட வடிவமே வெளியாகி உள்ளது. எழுதப்பட்ட முழுக் கட்டுரையை இங்கே பகிர்கிறேன்.




1992 ஜனவரி 22 முதல் 1998 ஜனவரி 18 வரையிலான காலப் பகுதியில் முரசொலி வளாகத்தில் பத்திரிகையாளனாகப் பணியாற்றியிருக்கிறேன். முதலில் 'தமிழன்நாளிதழ் ஆசிரியர் குழுவில் ஒருவனாக. 92 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட நாளிதழ் அதே ஆண்டு செப்டம்பர் 15 அன்று திமுகவின்  முப்பெரும் விழாச் சிறப்பிதழுடன் மூடுவிழாக் கண்டது. அதே வளாகத்திலிருந்து, அதே நிர்வாகத்தின் கீழ் வெளியாகி வந்த குங்குமம் வார இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவனாக ஆரம்பத்திலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பொறுப்பாசிரியனாகவும் - ஆசிரியர், பதிப்பாளர் பெயர்கள் தவிர மற்றவர்கள் பெயரை அச்சேற்றும்  வழக்கம் அன்று இல்லை – பணி புரிந்தேன். இடையில் சில மாதங்கள் அன்று 'முரசொலி'யின் ஆசிரியப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த ஏ.எம்.பஷீர் சொல்லி அதன்  வார இணைப்புக்காகவும் பணியாற்றியிருக்கிறேன். இந்த ஆறாண்டுப் பணிக் காலத்தில் கலைஞரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். பாராட்டுக் களைப் பெற்றிருக்கிறேன்.அதற்குச் சமமாகவே திட்டுகளையும் வாங்கி யிருக்கிறேன். இரண்டிலும் பத்திரிகையாளனாகக் கற்றுக் கொள்வதற் கான பாடங்கள் இருந்தன.

திமுக அரசியலுக்கும் கருணாநிதிக்கும் எதிரான இடதுசாரிச் சிந்தனைகளால் பேணப்பட்டு வளர்ந்தவன். எனவே கலைஞரின் அரசியல், கலை இலக்கியப் பங்களிப்புகள் பற்றி உயர்வான எண்ணம் இல்லாமல் இருந்தது.அடிக்கடி அணுக்கத்தில் அவரைப் பார்க்கக் கிடைத்த ஆண்டுகளில் கருத்து மாற்றமடைந்தது. ஆதாரமான  விமர்சனங்கள் மறைந்து விடவில்லை. எனினும் அவரது பங்களிப்புகள் பற்றித் தற்சார்பு இல்லாத மதிப்பீடுகள் உருவாயின. அவரது செயல் பாடுகள் பற்றி வியப்பு உருவானது. இன்று அவரது நிலைப்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனாலும் வியப்புக் கலைந்து விடவில்லை. பங்கேற்ற எல்லாத் துறைகளிலும் கலைஞர் தன்னுடையதான அடையாளத்தை நிலைநிறுத்தவே விரும்பி யிருக்கிறார். அந்தத் துறைகளில் செயல்படத் தேவையான கருவி களையும் செயல்முறைகளையும் பயன்பாட்டையும் அவராகவே கண்டடைந்திருக்கிறார்.அதற்காக அவர் மேற்கொண்டிருந்த அயராத உழைப்பும் இடைவிடாத பயிற்சியும் கற்றுக்கொள்ளத் தக்கவை. தனது சரிகளிலிருந்து மேலும் சரியானவற்றை நோக்கியும் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு சரியை நோக்கியும் நகர்ந்திருக்கிறார் என்பதையும் நேரிடையாகக் காண வாய்த்தது. இதழியலுக்கும் இது பொருந்தும்.

பத்திரிகையாளனாகக் கலைஞரின் இதழியல் செயல்பாடுகளிலிருந்து அவதானித்தவற்றில் மூன்று அம்சங்களை முக்கியமானவையாகக் கருதுகிறேன்.ஒன்று: ஓர் இதழாளனுக்குத் தேவையான எல்லாவற் றையும் பற்றிய பொது அறிவு.பத்திரிகையில் இடம்பெறும் சின்னச் செய்திகளும் கவனத்துக்குரியவை. அவையும் முக்கியமானவையே என்ற பார்வை.

நாளிதழில் இரண்டு பத்தி அளவிலான செய்தியொன்று வெளியாகி யிருந்தது. ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து சென்னையில் நிலவிய பதற்றமான சூழலில் நடந்த  விபத்தில் அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் சிக்கினார்.கவனிப்பார் யாருமில்லாத நிலையில் அண்ணா மேம்பாலத்தில் கிடந்த அவர் பல மணி நேரங்களுக்குப்  பிறகே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நினைவிழந்த நிலையிலேயே இரண்டு  ஆண்டுகள் இருந்தார். அரசு அவரது விஷயத்தில் பாராமுகமாக நடந்து கொண்ட்தைப் பற்றி அவரது மனைவி அளித்த நேர்காணல் வெளிவந்திருந்தது.மிகச் சிறிய செய்தியாகவே அது நாளிதழில் இடம் பிடித்திருந்தது. அந்தச் செய்தி முரசொலியிலும்  வெளியிடப்பட்டது. அதை ஆதாரமாக வைத்து முழுமையான புலனாய்வுக் கட்டுரையொன்றை குங்குமம் இதழில் எழுதினேன்.ஈ. எஸ். ஐ. மருத்துவரான டாக்டர்.  ரவீந்திரகுமாரின் அவலநிலை பற்றி விரிவாகவே எழுதியிருந்தேன். ரவீந்திர குமாரின் மனைவி ரத்னா அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி என்பதும்  கோவை நகரை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவரான ரத்தினசபாபதி முதலியாரின் சந்ததியில் வந்தவர் என்பதும் ரத்னாவை நேரில் சந்தித்தபோது கிடைத்த விவரங்கள். கட்டுரையில் இந்த விவரங்களையும் சேர்த்திருந்தேன். அது கட்டுரைக்கு மேலும் வலுவைக் கொடுத்தது. 

வார இதழில் வெளிவந்த கட்டுரையைப் படித்துவிட்டு முரசொலி யின் கலைஞர் கடிதம் பகுதியில் மறு பிரசுரம் செய்திருந்தார் கலைஞர்.பொருளாதார நெருக்கடியில் கைபிசைந்து நின்றிருந்த ரத்னாவுக்கு  திமுக சார்பில் நிதிஉதவியும் செய்தார். ஒரு பத்திரிகையாளனாக எனக்குக் கிடைத்த முதல் பெரும் கவனஈர்ப்பு கலைஞர் அந்தக் கட்டுரையை முன்னெடுத்தது. அதற்கு  நன்றி தெரிவிப்பதற்காக அனுமதி பெற்று  முரசொலி அலுவலகத்தில் அவரது தனி அறையில் சென்று பார்த்தேன். கட்டுரையில் சிறப்பு நிருபர் என்று என்னைக்  குறிப்பிட்டதற்கு நன்றி தெரிவித்தேன்.' நல்லா எழுதியிருக்கே, சின்ன விஷயத்துக்கு பின்னால் பெரிய செய்தி இருக்குமென்று கண்டுபிடித்தாயே அதுதான் பத்திரிகைக்காரனுக்கு வேண்டியது' என்றார். 'அதையும் உங்க கிட்டயிருந்துதான் கத்து கிட்டேன் அய்யா' என்று பதில் சொன்னேன். அவர் நெற்றியில் கேள்வி சுருங்கியது. சம்பவத்தைச் சொன்னேன்.

'தமிழன்' நாளிதழில் வார ராசிபலன்கள் பகுதி வெளிவந்து கொண்டிருந்தது. மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் எழுதி வந்தார். அவர் எழுதிக் கொடுக்காமற்போகும் நாட்களில் முந்தைய வார ராசிபலன் பகுதியில் மேஷ ராசிக்கான பலனை  விருச்சிக ராசிக்கும் துலாம் ராசிக்கானதை கும்பராசிக்குமாக மாற்றி பக்கத்தை ஒப்பேற்றுவது வழக்கம். அந்தப் பகுதி என் பொறுப்பில் இருந்தது. ஒருமுறை வார ராசிபலன் வந்து சேரவில்லை. பக்கம் அச்சுக்குப் போக வேண்டும். எனவே பழைய ராசிபலனைப் பழுது நீக்கிச் சேர்த்து விட்டோம்.மறுநாள் கலைஞர் அழைத்தார். 'ஏன்யா, விருச்சிக ராசிக்கான பலன்ல சித்திரை நட்சத்திரம் எப்படி வரும்? அது  துலாம் ராசியிலதான வரும்? என்னா ஜோசியமோ?' என்று கடிந்து கொண்டார்.அப்போதுதான் குளறுபடி புரிந்தது.கூடவே ஒன்றும் புரிந்தது. பத்திரிகையின் ஒவ்வொரு  எழுத்தையும் அவர் வாசிக்கிறார். கவனிக்கிறார். கொஞ்சமும் உடன்பாடில்லாத சோதிடப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை.ஒரு நாளிதழின் எல்லா அம்சங்களையும் பற்றியப் பொதுப் பார்வை தேவை என்பதைக் கலைஞரின் சுட்டிக் காட்டல் கற்பித்தது. சம்பவத்தைச் சொன்னதும் அவர் முகத்தில் சின்னச் சிரிப்பு ஓடியது.

ஒரு மனைவியின் போராட்டம் என்ற ரவீந்திரகுமார் கட்டுரையை மெச்சி சிறுதொகையை அன்பளிப்பாகக் கொடுக்கச் செய்தார் கலைஞர். அந்தத் தொகை அன்று நான்  பெற்று வந்த மாத ஊதியத்தின் கால் பங்கு. அந்தக் கட்டுரையில் சிறப்பு நிருபர் என்று எனக்குத் தகுதி வழங்கியது அந்த அன்பளிப்பை விடப் பெரியது. அதைவிட மதிப்பு  மிக்கது அவர் சொல்லாமல் கற்றுத் தந்த பாடம்.அது பின்னாளில் மிகவும் துணையாக இருந்தது.

ஒரு பத்திரிகையாளராக வாசகர்களை மதித்தவர் கலைஞர் என்பது இரண்டாவது அவதானிப்பு. தனது கருத்துக்கள் வாசகர்களிடம் சரியாகச் சென்று சேர வேண்டும் என்று அக்கறை கொண்டவர்.அதேசமயம் வாசகனுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத் தன்னுடையது என்று உருவாக்கி வைத்திருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிச் செல்ல விரும்பாதவர். முரசொலியில் அவர் எழுதும் கடிதங்களும் கேள்வி பதில்களும் அதற்கு உதாரணங்கள். முரசொலியின் வாசகர்களாகக் கருதப்படும் பெரும்பான்மையான கட்சிக்காரர்கள் அதை முழுமையாக வாசிக்கும் பழக்கமில்லாதவர்கள். கருப்பு சிவப்புத் துண்டைப்போலவே பத்திரிகையையும் கட்சியின் அடையாளமாக நினைப்பவர்களே அதிகம். ஆனால அவர்களின் வாசிப்புத் தரத்துக்குக் கீழிறங்கும் விதத்தில் கலைஞர் எழுதியதில்லை.தொடர்ந்து வாசிப்பதன் மூலம் அவர்களாகவே தனது கருத்துக்களை வந்தடைவார்கள் என்று நம்பியவர். வாசகனிடம் கீழறங்கிச் செல்வதல்ல; வாசகனை மேலே உயர்த்துவதுதான் பத்திரிகையாளனின் வேலை என்பது அவரிடமிருந்து தெரிந்து கொண்ட பாடம்.

பத்திரிகைகளில் பிழைகள் நேர்வது இயல்பு. எவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொண்டாலும் அச்சுப் பிசாசு குடியேறுவதைத் தவிர்க்க முடியாது. பத்திரிகையில் பிழை  ஏற்படுவதைக் கலைஞர் பொறுத்துக் கொள்ள மாட்டார். அந்த வகையில் அவர் ஒரு முழுமைவாதி ( பெர்ஃபெக்ஷனிஸ்ட் ). இது அவரிடம் கண்ட மூன்றாவது குணம்.அவரது ஆக்கங்கள் கைப்பட எழுதப்படுபவை. அதில் ஒரு பிழையும் காண முடியாது. அரைத் தாள்களில் எழுதுவார். அவரே அறியாமல் பிழை நேர்ந்து விடுமானால் அந்தப் பக்கமே கைவிடப்படும்.  மீண்டும் எழுதப்படும். அடித்தலோ திருத்தலோ பிழையோ இல்லாமல் தனது கைப்பிரதி இருக்க வேண்டுமென்று எச்சரிக்கையாக இருப்பவர். அவரளவுக்கு எச்சரிக்கை  வளாகப் பணியாளர்களிடம் கிடையாது என்பதால் ஆசிரியர் குழு உறுப்பினர் எவரோ ஒருவருக்கு அன்றாடம் மண்டகப்படி நடக்கும். இதழியல் பணி அவசர கதியில் நிறைவேற்றப் படுவது. அதில் பிழைகள் தவிர்க்க முடியாதது. பிழை நேர்ந்தால்  திருத்தம் வெளியிடவோ, தவறான தகவலாக இருந்தால் வருத்தம் தெரிவிக்கவோ வாய்ப்பு உண்டு. இவர் ஏன் அலட்டிக் கொள்கிறார் என்று தோன்றியதுண்டு. பிழைகள் மனித சகஜமான தவறுகள்தானே தவிர, குற்றங்கள்  அல்லவே என்றும் நினைத்திருக் கிறேன். ஆனால் சிறு பிழை கூடப் பெரிய ஊனத்தை ஏற்படுத்தி விடும் என்பதையும் முரசொலி வளாக நாட்களில்தான் உணர்ந்தேன்.

கலைஞர் பிறந்த நாளையொட்டி மலர் ஒன்று வெளியிட முடிவானது. டிசம்பர் மாதம் 25 தேதி கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்தவர்களுக்கு மனப்பதிவாக இருப்பதுபோல  ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்த நாள் என்பது திமுகவினருக்கு ரத்தத்தில் ஊறிய ஒன்று. எனினும் முரசொலி வளாகத்தில் மட்டும் மே மாதக் கடைசி ஓரிரு நாட்க ளில்தான் அது நினைவுக்கு வரும். நினைவு வந்ததும் பரபரப்பு சூழ்ந்து கொள்ளும். ஆஸ்தானச் சான்றோர்களான வைரமுத்து, அப்துல் ரகுமான், ஏ.கே.வில்வம் போன்றவர்களிடமிருந்தும் கட்சிப் பிரபலங் களிடமிருந்தும் கட்சிக்கு அப்பாற்பட்ட பிரபலங்களிடமிருந்தும் - இது அன்றைய அரசியல் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து அமையும் - கட்டுரைகள் பெறப்படும். எல்லாம் தொகுக்கப்பட்டு 3ஆம் தேதி அதிகாலை மலர் தயாராகி விடும். ஒருமுறை மலர் தயாரிப்புப் பணியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. 3 ஆம் தேதி அதிகாலை யில் மலர் முடியும் நிலைக்கு வந்திருந்தது. ஆரம்பத்தில் அச்சான பிரதிகள் கலைஞர் பார்வைக்காகக் கொடுத்தனுப்பப் பட்டன. பணி முடிந்த களைப்பில் மலர்ப் பொறுப்பாளராக இருந்த பஷீர் மேஜைமீது தலைசாய்த்துக் கண்ணயர்ந்திருந்தார்.அவரருகில் கிடந்த மலர்ப் பிரதியை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். கட்சிக்காரர் ஒருவர் கொடுத்திருந்த முழுப்பக்க விளம்பரத்தில் கண்ட பிழை என்னை அலற வைத்தது.  திடுக்கிட்டு எழுந்த பஷீர் என்ன என்றார்? ' சார், இதைப் பாருங்க என்றேன். 'ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி' என்ற பழமொழி சருகுபோல் வேரோடி என்று அச்சாகியிருந்தது. ' தொலைஞ்சோம்'  என்று பஷீர் பதறினார். அதற்குள் மலரைப் பார்த்து விட்ட கலைஞர் தொலைபேசியில் அழைத்தார்.' ஏன்யா, பிறந்தநாள் அன்றைக்கும் நிம்மதியா விடமாட்டீங்களா?' என்று தொலைபேசியை சாத்தினார். அச்சான பிரதிகள் அனைத்திலும் 'அருகுபோல்' என்ற வார்த்தையை மட்டும் தனியாக அச்சிட்டு ஒட்டி மலர் விநியோகத் துக்குப் போனது. 'இது என்ன மூட நம்பிக்கை' என்று அப்போது தோன்றினாலும் பிழை பொறுக்காத கலைஞரின் அக்கறை ஓர் இதழாளனுக்கு மிக முக்கியம் என்ற படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்.மலரில் மட்டுமல்ல; அவரது சொற்பொழிவுகள் அச்சிடப் படும்போதும் கேள்வி பதில்கள் அச்சாகும்போதும் அவற்றில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு உண்டு. அவர் சம காலத்துக்குரியதாக ஒன்றை எழுதினாலும் அது எதிர் காலத்துக்கும் பொருந்தக் கூடியதாகவே நினைத்தார். முரசொலிக்கு அவர் உருவாக்கிய தலைப்பு வாசகம். இன்றைய செய்தி நாளைய வரலாறு. அதை இம்மியும் விலகாமல் கடைப்பிடிக்கவும் செய்தார். ஒரு பத்திரிகையாளனின் தீர்க்கமான எண்ணத்தின் விளைவாகவே இதைக் காண்கிறேன். பத்திரிகையாளர் சந்திப்புக்களில் சில சமயம் காரியார்த்தமாகவும் சில சமயம் தோழமையாகவும் கலைஞர் சொல்லுவார்: 'நானும் பத்திரிகைக்காரன் தான்'. அது மிகையோ தற்புகழ்ச்சியோ அல்ல. தொட்டு உணர்ந்த உண்மை.



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக